தயரதன் மாண்பு
அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;
செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;
இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய்ம் மாண் கழலோன் – தரு நல் அற மூர்த்தி அன்னான். 1
ஆதிம் மதியும், அருளும், அறனும், அமைவும்,
ஏதில் மிடல் வீரமும், ஈகையும், எண் இல் யாவும்,
நீதிந் நிலையும், இவை, நேமியினோர்க்கு நின்ற
பாதி; முழுதும் இவற்கே பணி கேட்ப மன்னோ. 2
மொய் ஆர்கலி சூழ் முது பாரில், முகந்து தானக்
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;
மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்த்த, யாரும்
செய்யாத, யாகம் இவன் செய்து மறந்த மாதோ. 3
தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகும்கால், அறிவு ஒக்கும்;-எவர்க்கும், அன்னான். 4
ஈந்தே கடந்தான், இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான், பகை வேலை; கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான், திருவின் தொடர் போக பௌவம். 5
வெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர்
உள்ளமும், ஒரு வழி ஓட நின்றவன்;
தள்ள அரும் பெரும் புகழ்த் தயரதப் பெயர்
வள்ளல்; வள் உறை அயில் மன்னர் மன்னனே. 6
உலகமனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆள்பவன்
நேமி மால் வரை மதில் ஆக, நீள் புறப்
பாம மா கடல் கிடங்கு ஆக, பல் மணி
வாம மாளிகை மலை ஆக, மன்னற்குப்
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே. 7
பாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்
மே வரும் கை அடை வேலும் தேயுமால்;
கோவுடை நெடு மணி மகுட கோடியால்
சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால். 8
தயரதனின் குடையும் செங்கோலும்
மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து, தேய்வு இன்றி,
தண் நிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,
அண்ணல்தன் குடை மதி அமையும்; ஆதலான்,
விண்ணிடை மதியினை ‘மிகை இது’ என்பவே. 9
தயரதன் அரசு செய்யும் திறம்
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்,
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,
செயிர் இலா உலகினில், சென்று, நின்று, வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான். 10
குன்றென உயரிய குவவுத் தோளினான்,
வென்றி அம் திகிரி, வெம் பருதியாம் என,
ஒன்றென உலகிடை உலாவி, மீமிசை
நின்று, நின்று, உயிர்தொறும் நெடிது காக்குமே. 11
‘எய்’ என பழு பகை எங்கும் இன்மையால்,
மொய் பெறாத் தினவு உறு முழவுத் தோளினான்,
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான். 12
மிகைப் பாடல்கள்
விரிகதிர் பரப்பி, மெய்ப் புவனம் மீது இருள்
பருகுறும் பரிதி அம் குலத்தில், பார்த்திபன்
இரகு, மற்று அவன் மகன் அயன் என்பான், அவன்
பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே. 5-1