8. வேள்விப் படலம்

8. வேள்விப் படலம்


விசுவாமித்திரர் இராமனுக்குப் படைக்கலம் வழங்குதல்

விண்ணவர் போய பின்றை, விரிந்த பூமழையினாலே
தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந் தவத்தின் மிக்கோன்,
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன, படைக்கலம் அருளினானே. 1

ஆறிய அறிவன் கூறி அளித்தலும், அண்ணல்தன்பால்,
ஊறிய உவகையோடும், உம்பர்தம் படைகள் எல்லாம்,
தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி வருவபோல், வந்த அன்றே. 2

இராமன் ஏவலுக்கு படைகள் அமைந்து நிற்றல்

‘மேவினம்; பிரிதல் ஆற்றேம்; வீர! நீ விதியின் எம்மை
ஏவின செய்து நிற்றும், இளையவன் போல’ என்று
தேவர்தம் படைகள் செப்ப, ‘செவ்விது’ என்று அவனும் நேர,
பூவைபோல் நிறத்தினாற்குப் புறத்தொழில் புரிந்த அன்றே. 3

வழியில் எதிர்ப்பட்ட நதியைக் குறித்து இராமன் வினாவுதலும், முனிவனின் விடையும்

இனையன நிகழ்ந்த பின்னர், காவதம் இரண்டு சென்றார்;
அனையவர் கேட்க, ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகித் தோன்ற,
‘முனைவ! ஈது யாவது?’ என்று, முன்னவன் வினவ, பின்னர்,
வினை அற நோற்று நின்ற மேலவன் விளம்பலுற்றான்: 4

‘எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள்’ என்று,
அம் முனி புகல, கேளா, அதிசயம் மிகவும் தோன்ற,
செம்மலும் இளைய கோவும், சிறிது இடம் தீர்ந்த பின்னர்,
‘மைம் மலி பொழில் யாது?’ என்ன, மா தவன் கூறலுற்றான்: 5

நதியை அடுத்த சோலையின் சிறப்பை இராமன் கேட்க, முனிவன் எடுத்துரைத்தல்

‘தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை’ என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றும் கேளாய்:
எங்கள் நான்மறைக்கும், தேவர் அறிவிற்கும், பிறர்க்கும், எட்டாச்
செங் கண் மால் இருந்து, மேல்நாள் செய் தவம் செய்தது அன்றே. 6

‘”பாரின்பால், விசும்பின்பாலும், பற்று அறப் படிப்பது அன்னான்
பேர்” என்ப; “அவன் செய் மாயப் பெரும் பிணககு ஒருங்கு தேர்வார்
ஆர்?” என்பான்; அமல மூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம்;
ஈர்-ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து, இப்பால். 7

முனிவன் உரைத்த மாவலி வரலாறு

‘ஆனவன் இங்கு உறைகின்ற அந் நாள்வாய்
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்,
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்; 8

‘செய்தபின், வானவரும் செயல் ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான்;
ஐயம் இல் சிந்தையர் அந்தணர் தம்பால்,
வையமும் யாவும் வழங்க, வலித்தான்; 9

‘ஆயது அறிந்தனர் வானவர், அந் நாள்;
மாயனை வந்து வணங்கி இரந்தார்;
“தீயவன் வெந் தொழில் தீர்” என நின்றார்;
நாயகனும், அது செய்ய நயந்தான். 10

‘காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வால்-அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்து, ஓர்
ஆல் அமர் வித்தின் அருங் குறள் ஆனான். 11

‘முப்புரிநூலினன், முஞ்சியன், விஞ்சை
கற்பது ஒர் நாவன், அனல் படு கையன்,
அற்புதன்,-அற்புதரே அறியும் தன்
சிற்பதம் ஒப்பது ஒர் மெய்க்கொடு-சென்றான். 12

‘அன்று அவன் வந்தது அறிந்து, உலகு எல்லாம்
வென்றவன், முந்தி வியந்து எதிர் கொண்டான்;
“நிந்தனின் அந்தணர் இல்லை; நிறைந்தோய்!
எந்தனின் உய்ந்தவர் யார் உளர்?” என்றான். 13

‘ஆண்தகை அவ் உரை கூற, அறிந்தோன்,
“வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி,
நீண்ட கையாய்! இனி, நின்னுழை வந்தோர்
மாண்டவர்; அல்லவர் மாண்பு இலர்” என்றான். 14

‘சிந்தை உவந்து எதிர், “என் செய்?” என்றான்;
அந்தணன், “மூஅடி மண் அருள், உண்டேல்;
வெந் திறலாய்! இது வேண்டும்” எனா முன்,
“தந்தனென்” என்றனன்; வெள்ளி, தடுத்தான்: 15

‘”கண்ட திறத்து இது கைதவம்; ஐய!
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
அண்டமும் முற்றும் அகண்டமும், மேல்நாள்,
உண்டவன் ஆம்; இது உணர்ந்துகொள்” என்றான். 16

‘”நினைக்கிலை; என் கை நிமிர்ந்திட வந்து,
தனக்கு இயலாவகை தாழ்வது, தாழ்வு இல்
கனக் கரியானது கைத்தலம் என்னின்,
எனக்கு இதன்மேல் நலம் யாது கொல்?” என்றான். 17

‘”துன்னினர் துன்னலர்” என்பது சொல்லார்,
முன்னிய நல் நெறி நூலவர்; ‘முன்வந்து,
உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க’
என்னின், இவன் துணை யாவர் உயர்ந்தார்? 18

‘”வெள்ளியை ஆதல் விளம்பினை, மேலோர்
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்,
எள்ளுவ என் சில? இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால். 19

‘”மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர்;-எந்தாய்!-
வீந்தவர் என்பவர்; வீந்தவரேனும்,
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே? 20

‘”அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்;
கொடுப்பவர் முன்பு, ‘கொடேல்’ என நின்று,
தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்
கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை” என்றான். 21

‘”கட்டுரையின், தம கைத்து உள போழ்தே
இட்டு, இசைகொண்டு, அறன் எய்த முயன்றோர்
உள் தெறு வெம் பகை ஆவது உலோபம்;
‘விட்டிடல்’ என்று விலக்கினர் தாமே.” 22

‘முடிய இம் மொழி எலாம் மொழிந்து, மந்திரி,
“கொடியன்” என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன்;
“அடி ஒரு மூன்றும், நீ, அளந்து கொள்க” என,
நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான். 23

‘கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்,
பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள, விசும்பின் ஓங்கினான் –
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே. 24

‘நின்ற கால் மண் எலாம் நிரப்பி, அப்புறம்
சென்று பாவிற்றிலை, சிறிது பார் எனா;
ஒன்ற, வானகம் எலாம் ஒடுக்கி, உம்பரை
வென்ற கால் மீண்டது, வெளி பெறாமையே. 25

‘உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ் அடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,-
சிலை குலாம் தோளினாய்!-சிறியன் சாலவே! 26

‘”உரியது இந்திரற்கு இது” என்று, உலகம் ஈந்து போய்,
விரி திரைப் பாற்றுடல் பள்ளி மேவினான்;
கரியவன், உலகு எலாம் கடந்த தாள் இணை
திருமகள் கரம் செக்கச் சிவந்து காட்டிற்றே! 27

திருமால் இருந்த இடமே வேள்விக்கு ஏற்ற இடம் என முனிவன் கூறுதல்

‘ஆதலால், அரு வினை அறுக்கும்; ஆரிய!
காதலால் கண்டவர் பிறவி காண்குறார்;
வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு,
ஈது அலாது இல்லை, வேறு இருக்கற்பாலதே. 28

இராம இலக்குவர் காவல் இருக்க, முனிவன் வேள்வி தொடங்குதல்

‘ஈண்டு இருந்து இயற்றுவென் யாகம், யான்’ எனா,
நீண்ட பூம் பழுவத்தை நெறியின் எய்தி, பின்
வேண்டுவ கொண்டு, தன் வேள்வி மேவினான்,
காண்தகு குமரரைக் காவல் ஏவியே. 29

எண்ணுதற்கு, ஆக்க, அரிது இரண்டு-மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை,
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்,
கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர். 30

இராமன் முனிவனிடம் தீய அரக்கரின் வருகைப் பற்றி வினாவல்

காத்தனர் திரிகின்ற காளை வீரரில்
மூத்தவன், முழுது உணர் முனியை முன்னி, ‘நீ,
தீத் தொழில் இயற்றுவர் என்ற தீயவர்,
ஏத்த அருங் குணத்தினாய்! வருவது என்று?’ என்றான். 31

அது சமயம் அரக்கர் ஆரவாரம் செய்து வருதல்

வார்த்தை மாறு உரைத்திலன், முனிவன், மோனியாய்;
போர்த் தொழில் குமரனும், தொழுது போந்தபின்,
பார்த்தனன் விசும்பினை; -பருவ மேகம்போல்
ஆர்த்தனர், இடித்தனர், அசனி அஞ்சவே. 32

அரக்கர் சேனையின் திறன்

எய்தனர்; எறிந்தனர்; எரியும், நீருமாய்ப்
பெய்தனர்; பெரு வரை பிடுங்கி வீசினர்;
வைதனர்; தெழித்தனர்; மழுக் கொண்டு ஓச்சினர்;
செய்தனர், ஒன்று அல தீய மாயமே. 33

ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின,
கானகம் மறைத்தன, கால மாரி போல்;
மீன் நகு திரைக் கடல் விசும்பு போர்த்தென,
வானகம் மறைத்தன, வளைந்த சேனையே. 34

வில்லொடு மின்னு, வாள் மிடைந்து உலாவிட,
பல் இயம் கடிப்பினில் இடிக்கும் பல் படை,
‘ஒல்’ என உரறிய ஊழிப் பேர்ச்சியுள்,
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே. 35

அரக்கரை இலக்குவனுக்கு இராமன் காட்டுதல்

கவருடை எயிற்றினர்; கடித்த வாயினர்;
துவர் நிறப் பங்கியர்; சுழல் கண் தீயினர்;
‘பவர் சடை அந்தணன் பணித்த தீயவர்
இவர்’ என, இலக்குவற்கு இராமன் காட்டினான். 36

உடனே அம்பு எய்து வீழ்த்துவதாக இலக்குவன் கூறுதல்

ஈண்ட அக் குமாரனும், கடைக் கண் தீ உக,
விண்தனை நோக்கி, தன் வில்லை நோக்கினான்;
‘அண்டர் நாயக! இனிக் காண்டி, ஈண்டு அவர்
துண்டம் வீழ்வன’ என, தொழுது சொல்லினான். 37

வேள்விச் சாலையின்மேல் இராமன் சரக்கூடம் அமைத்தல்

‘தூம வேல் அரக்கர்தம் நிணமும் சோரியும்
ஓம வெங் கனலிடை உகும்’ என்று உன்னி, அத்
தாமரைக் கண்ணனும், சரங்களே கொடு,
கோ முனி இருக்கை, ஓர் கூடம் ஆக்கினான். 38

இராமன் போர் செய்யத் தொடங்குதல்

நஞ்சு அட எழுதலும் நடுங்கி, நாள்மதிச்
செஞ் சடைக் கடவுளை அடையும் தேவர்போல்,
வஞ்சனை அரக்கரை வெருவி, மா தவர்,
‘அஞ்சனவண்ண! நின் அபயம் யாம்’ என்றார். 39

தவித்தனன் கரதலம்; ‘கலங்கலீர்’ என,
செவித்தலம் நிறுத்தினன், சிலையின் தெய்வ நாண்;
புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்;
குவித்தனன், அரக்கர்தம் சிரத்தின் குன்றமே. 40

இராமனின் அம்பு சுபாகுவைக் கொன்று, மாரீசனைக் கடலில் சேர்த்தல்

திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்,
வெருவரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது; அங்கு
ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே. 41

இறவாது எஞ்சிய அரக்கர்கள் அஞ்சி ஓடுதல்

துணர்த்த பூந் தொடையலான் பகழி தூவினான்;
கணத்திடை விசும்பினைக் கவித்துத் தூர்த்தலால்,
‘பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு’ எனா
உணர்த்தினர், ஒருவர்முன் ஒருவர் ஓடினார். 42

பிற போர்க் கள நிகழ்ச்சிகள்

ஓடின அரக்கரை உருமின் வெங் கணை
கூடின; குறைத் தலை மிறைத்துக் கூத்து நின்று
ஆடின; அலகையும், ஐயன் கீர்த்தியைப்
பாடின; பரந்தன, பறவைப் பந்தரே. 43

தேவர்கள் இராமனை வாழ்த்துதல்

பந்தரைக் கிழித்தன, பரந்த பூ மழை;
அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன;
இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார்;
சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார். 44

புனித மா தவர் ஆசியின் பூ மழை பொழிந்தார்;
அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த;
முனியும், அவ் வழி வேள்வியை முறைமையின் முற்றி,
இனிய சிந்தையன், இராமனுக்கு இனையன இசைத்தான்; 45

வேள்வியை இனிது முடித்த முனிவன் இராமனைப் பாராட்டுதல்

‘பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை
போக்கி, நிற்கு இது பொருள் என உணர்கிலென் – புவனம்
ஆக்கி, மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி,
காக்கும் நீ, ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே.’ 46

‘யான் இனி செய்யவேண்டிய பணி யாது?’ என இராமன் முனிவனைக் கேட்டல்

என்று கூறிய பின்னர், அவ் எழில் மலர்க் கானத்து,
அன்று, தான் உவந்து, அருந் தவ முனிவரோடு இருந்தான்;
குன்றுபோல் குணத்தான் எதிர், கோசலை குருசில்,
‘இன்று யான் செயும் பணி என்கொல்? பணி!’ என இசைத்தான். 47

முனிவன் ‘சனகன் வேள்வியைக் காணச் செல்வோம்’ என்று சொல்ல, மூவரும் மிதிலைக்குப் புறப்படுதல்

‘அரிய யான் சொலின், ஐய! நிற்கு அரியது ஒன்று இல்லை;
பெரிய காரியம் உள; அவை முடிப்பது பின்னர்;
விரியும் வார் புனல் மருதம் சூழ் மிதிலையர் கோமகன்
புரியும் வேள்வியும், காண்டும் நாம்; எழுக!’ என்று, போனார். 48